Welcome!!


பலி

Monday, June 15, 2009

இச்சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்கென எழுதப்பட்டது.
சுட்டி : http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html



" சட்டுனு ஒத்தக் காலப்புடிச்சு வெட்டுனு வெளிய இளுத்தாருவானா, அதவிட்டுட்டு.. "
வாசலுக்குக் கீழே கிடந்த கருங்கல்லில் குடைக்கம்பை ஊன்றி நின்ற முத்தம்மா ஆச்சி கடைவாயில் குதப்பிய பட்டணம் பொடியுடன் அதிகாரம் செய்துகொண்டிருந்தாள். சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டு சென்றால் மட்டுமே உள்ளே செல்லும்படியாக இருந்த கோழிக்கூட்டில் உள்ளே பாதியும் வெளியே பாதியுமாகக் கிடந்தான் செல்வம். கூட்டின் கிழக்குப்பக்கம் இருந்த சிறிய ஜன்னல் வழியாக கசிந்த வெளிச்சம் கோழிகளை அவனுக்கு அடையாளம் காட்டியது.

ஆச்சி பிடிக்கச் சொல்லியிருந்த சிகப்புநிற பெருவெடச்சேவல் மேற்குச் சுவரோரம் இரண்டு கோழிகளுக்குப் பின்னால் நின்றது. பயந்த கோழிகள் இறக்கைகளை அடித்துக்கொண்டதில் கூட்டினுள் புழுதி கிளம்பியது. மேலுதட்டை உயர்த்தி மூக்கை மூடிக்கொண்டு கண்களை மெல்லத் திறந்துபார்த்து சேவலின் காலை எட்டிப்பிடித்தான். காய்ந்த கோழி எச்சம் செல்வத்தின் சட்டையில்லாத வயிற்றில் அழுந்தியது. வெளியே வருவதற்கு முன் சரியான சேவலை பிடித்திருக்கிறோமா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டான். இல்லையென்றால் எழுந்திருக்கும் முன்னமே ஒரு கோழிய புடிக்கத் தெரியாதா என்று குடைக்கம்பால் ஒரு அடிவிழும்.

சேவல் இறக்கைகளை அடிக்காதபடி ஆச்சி அவற்றை குறுக்காகப் பின்னினாள். கையில் தயாராக வைத்திருந்த பாக்கா கயிற்றால் கால்களை சேர்த்துக்கட்டி திண்ணைமேல் பதித்திருந்த ஆட்டுரலில் போட்டுவிட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டாள். பயந்திருந்த சேவல் சப்தமிட்டு கொக்கரித்துக்கொண்டே இருந்தது. பாதிக்கு மண் நிரம்பிய வெண்கல கூஜாவில் பொடி கலந்த எச்சிலை 'புளிச்' என்று துப்பிவிட்டு, மீண்டும் ஒருமுறை பொடி எடுத்து கடைவாயில் இழுத்துக்கொண்டாள். கடைசியாக சுருக்குப்பையிலிருந்து எடுத்த பத்துப்பைசாவை அதுவரை அமைதியாக பார்த்துகொண்டே நின்ற செல்வத்திடம் கொடுத்தாள்.

காலையில் பண்டாரங்கடையிலிருந்து அவித்த மொச்சை வாங்கிவந்து கொடுத்தாலோ, கோழிக்கூட்டில் நுழைந்து கோழி பிடித்துக்கொடுத்தாலோ அவள் தரும் பத்துப்பைசாவுக்காக அல்லாது அவனுக்கு ஆச்சியை கொஞ்சமும் பிடிப்பதில்லை. அவள் அம்மாவை திட்டும்போதும் அதிகாரம் செய்யும்போதும் அவனுக்கு கோபம் கோபமாக வரும். அதேசமயம் அவள் சொல்லும் வேலைகளையும் முடியாது என்றும் சொல்வதற்கில்லை. பிடிக்காது என்றாலும் திண்பண்டம் வாங்கக் கிடைக்கும் பைசாவிற்காக எப்படியாவது செய்து விடுவான்.

பயத்தில் கொக்கரித்துக்கொண்டே இருந்த சேவல் உரலிலிருந்து துள்ளி தரையில் விழுந்தது. திண்ணையில் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே ஆச்சி தன் குடைக்கம்பின் வளைந்த முனையை சேவலின் கட்டப்பட்ட கால்களுக்கிடையே கோதி இழுத்தாள். அது தரையில் தரதரவென்று இழுத்துக்கொண்டும் தலையை உரசிக்கொண்டும் வந்தது. அதன் காலைப்பிடித்து தூக்கி இறக்கைகளை மீண்டும் ஒரு திருகு திருகி உரலுக்குள் தூக்கிப்போட்டாள். அது அதிகமாய் கொக்கரித்துக்கொண்டே சொத்தென விழுந்தது. அதன்பின் அதனால் சிறிதும் அசைய முடியவில்லை.

கிடைத்த காசுக்கு தேன்முட்டாய் வாங்கித் தின்றுகொண்டிருந்த செல்வத்துக்கு கோபமாக வந்தது. கையில் மீதமிருந்த ஒரு தேன்முட்டாயை மண்ணில் போட்டு அதை ஓங்கி மிதித்துவிட்டு வீட்டுக்குள் ஓடினான்.

" யம்மா, கோழிக்கார்ரு எப்பம்மா வருவாரு, ஆச்சி கோழிய பாடாப்படுத்துதா "

" அது கொழிக்கார்ருக்கு இல்லடா.. " என்றாள் அம்மா.

" வேற யார்க்கும்மா ? "

" ஆசாரி வீட்ல வெலய்க்கு கேட்ருக்காகன்னு நெனய்க்கேன்.. நாள மரத்தோணில இருந்து சாமியாடி வாராகளாம் "

அவர்கள் வீட்டிலிருந்து கிழக்கே மூன்றாவது ஆசாரி வீடு. பக்கத்து ஊரான மரத்தோணியில் இருக்கும் முத்துவீரப்பன் சாமிதான் அவர்களின் குல தெய்வம். ஒவ்வொரு வருடமும் அந்தக் கோவில் திருவிழாவின்போது சாமியாடுபவர்கள் ஊர்வலமாக ஆசாரி வீட்டிற்கு வருவார்கள். ஆசாரி வீட்டில் சாமிக்கு பலியும் பூஜையும் செய்வார்கள். பார்க்கவே பயமாக இருக்கும் சாமியாடியை சிறுவயது முதலே அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு பலமுறை வேடிக்கை பார்த்திருக்கிறான் செல்வம்.

இரவு செல்வத்திற்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். மாலையில் ஆசாரியின் மனைவி வீட்டில் வந்து பணம் கொடுத்துவிட்டு சேவலை வாங்கிச் சென்றபோதுகூட அவனுக்கு என்னமோ போல் இருந்தது.

இதற்கு முன்னாலும் பலமுறை ஆச்சிக்கு கோழி பிடித்துக் கொடுத்திருக்கிறான். ஆச்சியும் அவற்றை எல்லாம் வட்டமான மூங்கில் கூடையொன்றை சைக்கிளில் பின்னால் கட்டிக்கொண்டு வரும் கோழிக்காரருக்கு விற்றுவிடுவாள். அதன்பின் அது கொல்லப்படுவதைப் பற்றி அவன் ஒருமுறைகூட நினைத்தது கிடையாது. ஆனால் காலையில் இந்தச் சேவலை கொல்லப்போகிறார்கள் என்று நினைக்கும்போது அவனுக்கு பாவமாக இருந்தது. அதிலும் சாமியாடிக்கு பலி கொடுப்பதற்காக என்று நினைத்தால் கூடவே பயமாகவும் இருந்தது.

அறையை நிறைத்துப் பரவியிருந்த இருட்டின் எல்லா இடத்திலும் சேவலின் உருவமே அவனுக்குத் தெரிந்தது. இரவின் அமைதியின் பின் சேவலின் கொக்கரிப்பு கேட்டுக்கொண்டே இருப்பதுபோலத் தோன்றியது. இரவெல்லாம் சிறிதுநேரம் உறங்குவதாகவும் பிறகு சட்டென விழித்துக்கொள்வதாகவுமே இருந்தான். காலை விடியும்போது அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு சேவலின் கொக்கரிப்புச் சத்தம் மாறி மேளச்சத்தம் தூரத்தில் கேட்டது.

சாமியாடி ஊர்வலம் அடுத்த தெருவில் வந்துகொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் தெருமுனையில் திரும்பி இந்தத் தெருவிற்கு வந்துவிடும். இங்கே ஆசாரி வீட்டில் மட்டும் நின்று பலியும் பூஜையும் வாங்கிகொண்டு திருநீறு பூசிவிட்டு அப்படியே மரத்தோணிக்குப் போய்விடும்.

ஊர்வலம் தெருவில் நுழைந்தவுடனே ஆசாரி வீட்டு முற்றத்தில் கூட்டம் கூட ஆரம்பித்தது. முகம் மட்டும் கழுவியிருந்த செல்வத்தையும் அழைத்துக்கொண்டு அவன் அம்மா ஆசாரி வீட்டு வாசற்படியருகில் போய் நின்றுகொண்டாள். ஆச்சி முன்னமே சென்று அங்கே நின்றிருந்ததால் அவளருகில் நிற்கப் பிடிக்காத செல்வம் விலகி எதிர்ப்பக்க வரிசையில் போய் நின்றான்.

கையில் மூன்றடி நீள அரிவாளுடன் உக்கிரமாக ஆடிவரும் சாமியாடியை பார்க்கவே பயமாக இருந்தது. ஆறடிக்கு மேலான உயரத்தில் ரோமம் அடர்ந்த தொப்பையுடன் இருந்தார். முறுக்கி விட்டிருந்த கடாமீசை. கன்னத்திலும் நெற்றியிலும் நிறைய சந்தனம் பூசப்பட்டிருந்தது. கழுத்தில் சிறியதும் பெரியதுமான நான்கைந்து மாலைகள். கருவிழிகளை உருட்டி உருட்டி மிரட்டும்படியாகவும் நாக்கை மடக்கி அதட்டிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் திரும்பி ஆடிக்கொண்டு வந்தார்.

ஊர்வலம் ஆசாரி வீட்டு முற்றத்திற்கு வந்தவுடன் மேளத்தின் வேகம் அதிகமானது. சாமியாடி இன்னும் உக்கிரமாக ஆடினார். ஆசாரி வீட்டில் அனைவரும் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள் முகத்தில் பக்தியும் பெருமையும் அதிகமாக இருந்தது. ஆசாரியின் மனைவி கையிலிருந்த பெரிய தாம்பாளத்தை சாமியாடிக்கு முன்னால் வைத்து விழுந்து வணங்கினார். அதில் மாலை தேங்காய் பழம் எல்லாம் இருந்தன.

முந்தைய நாள் செல்வம் பிடித்துக்கொடுத்த சேவலை ஆசாரியின் மகன் இருகைகளிலும் சேர்த்துப் பிடித்திருந்தான். மேளச் சத்ததிலும் கூட்டத்திலும் அரண்டு போயிருந்த சேவல் சத்தம் போடாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தது. அதன் தடித்து முற்றிய கால்களில் மஞ்சள் குங்குமம் தடவி கழுத்தில் மல்லிகையும் கனகாம்பரமும் சேர்த்துக் கட்டிய பூச்சரத்தைச் சுற்றியிருந்தார்கள். ஆசாரி பயபக்தியுடன் அந்தச் சேவலை வாங்கி சாமியாடியின் கையில் கொடுத்துவிட்டு விழுந்து வணங்கி தேங்காய் உடைத்து பூஜை செய்தார்.

சாமியாடி சேவலைப் பிடித்த கணத்தில் மேளங்களின் சத்தம் இன்னும் அதிகமானது. சுற்றியுள்ளவர்கள் பரபரப்பானார்கள். பெண்கள் குலவை போட்டார்கள். சேவல் பயத்தில் இறக்கைகளை அடித்துக்கொண்டு கத்தியது. அத்தனை மேளச் சத்தத்திற்கு நடுவிலும் அதன் பயம் கலந்த கொக்கரிப்புச் சப்தத்தையே கவனித்துக் கொண்டிருந்தான் செல்வம். அது அவனுக்கு சொல்லமுடியாத அளவுக்கு பாவமாக இருந்தது.

சாமியாடி இடதுகையால் இறக்கைகளை ஆக்ரோஷமாகத் திருகி வலதுகை விரல்களுக்கிடையில் தலையைக் கிடுக்கி கழுத்தின் பின்புறம் வாய்வைத்துக் கடித்து வெடுக்கென இழுத்தார். தனியாகப் பிய்ந்த தலை மண்ணில் விழுந்து துடித்தது.

திமிறிய சேவலின் உடலை வலது கையால் பிடித்தடக்கி அண்ணாந்துகொண்டு அதன் கழுத்தில் வாய்வைத்து இரத்தத்தை ஒரே உறிஞ்சாக உறிஞ்சியதில் சாமியாடியின் கழுத்து நரம்பு புடைத்தது. இரத்தத்தை அவர் விழுங்கும்போது தொண்டையெலும்பு மேலும் கீழும் ஏறியிறங்கியது. கடைவாயில் ஒழுகிய ரத்தத்தை ஒரு மாலையால் துடைத்துக் கொண்டார். துடிப்பு அடங்கிய சேவலை கீழே வீசியெறிந்து, வாயில் ஒட்டியிருந்த கோழி இறகுகளைத் துப்பினார். அதன்பின் ஆசாரி சூடன் பற்றவைத்து காட்டினார்.

எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சாமியாடியிடம் திருநீறு பூசிக்கொண்டார்கள். தனது இரத்தம் பிசிபிசுத்த கையால் எல்லோருக்கும் திருநீறு பூசினார். மேளத்தின் உக்கிரம் கொஞ்சம் குறைந்தது. கூட்டத்தில் நின்றிருந்த பெண்களில் ஒருத்தி வெகுநேரமாய் குவலையிட்டுக்கொண்டே இருந்தாள். அது செல்வத்திற்கு இன்னும் பயத்தைக் கொடுத்தது.

ஆச்சி கையிலும் திருநீறு வாங்கி முந்தானையில் முடிந்துகொண்டாள். அம்மா சொல்லியும்கூட அவன் திருநீறு பூசிக்கொள்ளவில்லை. கீழே அசையாமல் கிடந்த சேவலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அது இறுதியாக ஒருமுறை துள்ளிவிழுந்து அடங்கியது.

செல்வத்திற்கு சப்தமாக அழவேண்டும் போல் இருந்தது. சாமியாடி மீதும் முத்தம்மா ஆச்சி மீதும் அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. திருநீறு வாங்க முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விலகி கலங்கிய கண்களுடன் வீட்டிற்கு நடந்தான்.

இரண்டு நாட்களாக காற்றில் கலந்த சேவலின் கொக்கரிப்புகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அத்தனை மேளச் சத்தத்தையும் மீறி அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஆறுதலற்ற பொழுதுகள்

Tuesday, February 17, 2009




பேருந்தில் கூட்டம் அதிகமில்லை. இருக்கும் சிலரும் என்னைப்போலவே ஆளுக்கொரு சீட்டில் கால்பரப்பி அமர்ந்தபடி சாலையின் இருபுறமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வடபுறத்தில் பச்சைக்காடுகள் தாண்டி தூரமாய்த் தெரியும் காரிசாத்தான் மலை, ஓவியத்தில் வரைந்து வைத்ததுபோல் அம்சமாக இருக்கிறது. அதன் உச்சியில் சிறு வெள்ளைச் சதுரமாய்த் தெரியும் முருகன் கோவிலும், அதையொட்டிய அரசமரமும் அத்திசையில் கண்களைப் பரவவிடும் யாவரையும் எளிதாக கவர்திழுக்கும். இச்சாலையில் இந்தச்சூழலைப் பார்க்கும் யாவரும் இதை மிகவும் அழகான கிராமம் என்பதைத் தயக்கமின்றி ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பேருந்து அம்மன்கோவிலைத் தாண்டியவுடன்தான் கவனித்தேன், தறிச்சத்தம் ஏதுமில்லாமல் ஊர் அடங்கியிருந்தது.

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்ட கிராமத்தில் எப்பொழுதும் இடைவிடாது தறிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். விடுமுறை நாட்கள்கூட எல்லோருக்கும் ஒன்றாய் அமைவதில்லை. இந்துக்களுக்கு கார்த்திகை தினத்தன்று விடுமுறை என்றால் கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இரவிலும்கூட ஓயாமல்கேட்கும் விசைத்தறிகளின் சப்தம் மக்களின் உறக்கத்தைப் பாதிப்பதில்லை. இரயில் தண்டவாளத்தின் அருகில் குடியிருப்பவர்கள் இரயில் சத்தம் கேட்காமல் தூக்கம் வருவதில்லை என்பார்களே, அதுபோல தறிச்சத்தம் கேட்காமல் இங்கு பலருக்குத் தூக்கம் வருவதில்லை. அவர்களுக்கு அதுதான் தாலாட்டு என்பார்கள். எனக்கும்கூட தறிச்சத்தம் கேட்டபடி தூங்குவது மிகவும் பிடிக்கும்.

இன்று ஊர் அமைதியாக இருப்பதற்கு ஒரே காரணம்தான் இருக்கமுடியும். எனக்குத் தெரிந்து ஊரில் வயதானவர்கள் யார் யாரென்று மனது கணக்கு போடத்தொடங்கியது. பேசாமல் யாரிடமாவது கேட்டுப்பார்க்கலாம் என பார்வையை சுழற்றினேன். எல்லாம் பார்த்த முகங்கள் என்றாலும் பேசுமளவுக்கு பழக்கப்பட்ட முகங்கள் யாருமில்லை. நடத்துனருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இதே பேருந்து ஒரு நாளைக்கு நான்கைந்துமுறை ஊருக்கு வந்துசெல்வதால் அவருக்குத் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் எழுந்துசென்று கேட்டேன்.

" ஊர்ல ஏதும் துஷ்டியாண்ணே? "

" ஆமாங்க தம்பி "

" யாரு? "

" தலயாரி மவன்னு சொன்னாக.. அவருக்கு ஒரே பயலாமே "

தூக்கிவாரிப்போட்டது எனக்கு. பேச்சில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

" என்ன அண்ணாச்சி சொல்லுதீக?.. எந்தத் தலயாரி? "

" ஏம்ப்பா, ஒங்க ஊருக்கென்ன நாலு தலயாரியா இருக்காக "

அவர் தலையாரி என்றதுமே எனக்கு புரிந்துவிட்டது. இருந்தும் அவர் வேறு யாரையாவது சொல்லிவிட மாட்டாரா என்ற நப்பாசையில்தான் நான் கேட்டிருக்க வேண்டும்.

" என்னாச்சாம்? "

" ஆவுறதுக்கு என்ன, விதி முடியுற வயசா, காலக் கட்டிக்கிட்டு அவுக காட்டுக் கிணத்துல குதிச்சுட்டானாம். லவ் ஃபெய்லியருனு சொல்லிக்கிறாக.. "

அந்தச் செய்தி என் இதயத்தில் இடியாக இறங்கியது. இரு தினங்களுக்கு முன்பு பேருந்திலேறிச் செல்லும்போது கைகாட்டிய நின்றிருந்த மூர்த்தியின் முகம் மனதில் வந்துபோனது.

நேற்று முந்தினம் காலையில் பேருந்துவிட்டு இறங்கியபொழுது முதன்முதலாய் வரவேற்ற குரல் தலையாரி கோமதிநாயகம் மாமாவினுடையது. யாருடனோ பேசிக்கொண்டிருந்தவர் என்னைக்கண்டதும் அப்படியே வந்துவிட்டார். வழக்கமான தன் குரலில் சுருதிகூட்டிப் பேச ஆரம்பித்தார்.

" வாங்க மாப்ள, இப்பதான் வாறீகளா.. எப்டி இருக்கீக "

" நல்லா இருக்கேங்க மாமா.. நீங்க எப்டி இருக்கீக "

" எனக்கென்ன குறைச்சல் மாப்ள.. ஒடயநாச்சி கேட்டதெல்லாம் கொடுக்கா.. அவ புண்ணியத்துல ரொம்ப நல்லாவே இருக்கேன்.. இப்ப எத்தன நாள் லீவு ? "

" நாலு நாள் மாமா.. நாளை மதுரைல ஃபிரண்டோட அக்காவுக்கு கல்யாணம். கூடப் படிக்கிற பசங்க கொஞ்சப்பேர் வர்றாக.. அதான், அவங்களுக்கு இந்தப்பக்கம் நாலு இடத்தக் கூட்டிப்போய் காட்டலாம்னு.."

" நல்லது.. நல்லது.. , செய்யுங்க " என்றவர். " அங்கனயே உங்களுக்கும் ஒரு நல்ல பொண்ணா பாத்துட்டு வந்துருங்க மாப்ளே... " என்று சொல்லி சிரித்துக்கொண்டார்.

கிராமத்தின் தலையாரி என்பதால் ஊரில் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமானவர். என்னை மாப்பிள்ளை என்று உரிமையுடன் அழைப்பார். கேலி கிண்டல் பேசுவார். அவர் எனக்கு உறவுமுறை இல்லையெனினும் நானும் அவரை மாமா என்றே அழைப்பேன்.

வருகிறேன் என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தவன், மறந்தவனாக திரும்பிக்கேட்டேன்.

" ஆங், கேட்க மறந்துட்டேன், மூர்த்தி எப்டி இருக்கான்.. இந்த வாரம் வந்திருக்கானா? "

" ஆமா மாப்ள.. நேத்து காலைல வந்தான். ஒருவாரம் பரிச்சைக்குப் படிக்க லீவாம். நேத்து கூட நீங்க வந்திருக்கீகளான்னு கேட்டான். நான் இல்லேன்னு சொல்லிட்டேன்.. நீங்க வாரது எனக்குத் தெரியாதுல்லா. "

" பரவாயில்லைங்க மாமா.. நான் மதியம் ஒரு மணி பஸ்ல மதுரை கிளம்புறேன்.. முடிஞ்சா அதுக்கு முன்னாடி நான் வந்து பாக்கேன்.. நேரமிருந்தா அவனக்கூட வீட்டுக்கு வரச்சொல்லுங்க "

" சரி, சொல்லுதேன் " என்றவர், சுருதி தாழ்த்திச் சொன்னார்,

" ஆனா, பையன் பழய மாறி சூட்டிக்கா இல்ல மாப்ளே, கம்முனே கெடக்கான். என்னான்னு நீங்கதான் கேட்டுச் சொல்லணும்.."

" பரிச்சை டைம்ல்லா.. அப்டித்தான் இருப்பான்.. எதுக்கும் நான் கேக்கேங்க மாமா.. "

" என்னமோ மாப்ள, படிச்சாம்னா சரிதான்.. " என்றவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

மூர்த்தி, அவரது ஒரே மகன். என்னைவிட இரண்டு வயது சிறியவன். எப்பொழுதும் புன்னகை மாறாத முகம். நான்கைந்து வருடங்களுக்கு முன்புதான் அவன் எனக்கு நண்பனானான். அந்த நட்பின் மூலமே தலையாரி எனக்கு மாமாவானார். அவன் என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். என்மீது அதிக பாசமும் மரியாதையும் வைத்திருந்தான். அவன் எனக்கு உடன்பிறந்த தம்பியாக இருந்திருக்கலாம் என்றுகூட நான் சிலமுறை நினைத்ததுண்டு.

நான்கு பெண் பிள்ளைகளுக்குப்பிறகு திருச்செந்தூர் முருகனுக்கு காவடி எடுத்துச்சென்று வேண்டியபின் பிறந்தவன் என்று மாமா அடிக்கடி கூறுவார். அவர்கள் வீட்டில் மட்டுமல்ல. உறவினர் வீடுகளிலும்கூட அவன்தான் செல்லப்பிள்ளை. இந்த வருடம் தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறான். எப்படியாவது ஓர் முதல்நிலை அரசுக்கல்லூரியில் பொறியியல் படிக்கவைத்துவிட வேண்டுமென்று மாமா விரும்பினார். மதிப்பெண் சற்று குறைவாகப்போகவே தனியார் கல்லூரியில் சேர்க்கும்படியாய் ஆயிற்று.

முந்தைய இரவு முழுவதும் பயணம்செய்த களைப்பில் நன்றாகத் தூங்கியிருந்தேன். சொல்லிவைத்த நேரத்திற்கு அம்மா எழுப்பிவிடவில்லை. அவள் எப்பொழுதும் இப்படித்தான். உறங்கும் யாரையும் எழுப்ப வேண்டுமென்றால் அநியாயத்திற்குத் தயங்குவாள். எழுப்பிவிடச் சொல்லிவிட்டுப் படுத்தால் அசந்து தூங்கறானே, என்றெண்ணி விட்டுவிடுவாள். ஏழைக்கும் கிடைக்கிற மிகப்பெரிய மகிழ்ச்சி உறக்கம் என்பது அவள் எண்ணம். சிறுவயதில் நான் இரவில் சாப்பிடாமல் தூங்கிவிட்டால், உறக்கம் கலையாதபடி எழுப்பிச் சோறூட்டிவிட்டு மீண்டும் அமைதியாக தூங்க வைத்துவிடுவாள்.

மதியப்பேருந்திற்கு அரைமணி நேரமே இருக்கும்பொழுதில் எழுப்பிவிட்டிருந்தாள். மதுரை திருமணத்திற்குவரும் நண்பர்களுடன் மாலையில் மீனாட்சி கோயில், நாயக்கர் மஹால் செல்லும் திட்டம் இருந்தது. இந்தப் பேருந்தைத் தவறவிடும்பட்சத்தில் அந்தத் திட்டங்கள் எதுவும் நடக்காமல் போகுமென்பதால் துணிமணிகள் எடுத்துவைத்து ஆயத்தமானேன். அம்மா வந்து மூர்த்தி வந்திருப்பதாகச் சொன்னாள். அவன் காலையில் ஏற்கனவே ஒருமுறை வந்ததாகவும், அப்போது நான் தூங்கிக்கொண்டிருந்ததால் அப்புறம் வருவதாக சொல்லிச் சென்றுவிட்டதாகவும் சொன்னாள்.

மூன்று நான்கு மாதங்கள் கழித்துப்பார்க்கும் அவன் முகத்தில் அதிக மாற்றம் தெரிந்தது. எப்பொழுதும் அவனிடம் இருக்கும் கலகலப்பு இல்லை. கண்கள் குழிவிழுந்திருந்தன. மிகவும் அமைதியாக இருந்தான். எனக்கு அவனை பார்க்கவே மனது கஷ்டமாக இருந்தது. அவன் என்னிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் வைத்திருக்கிறான் என்று நன்றாகப் புரிந்தது.

அவன் என்னுடன் பழகிய நாட்களிலிருந்து எந்த விஷயத்தையும் என்னிடம் மறைத்ததில்லை. ஒரு அண்ணனாகவும் நண்பனாகவும் மனதில் உள்ள எல்லா விசயங்களையும் பகிர்ந்திருக்கிறான். தேவையான பொழுதுகளில் அபிப்ராயம் கேட்டிருக்கிறான். சிலநேரம் அழுதுபுலம்பவும் செய்திருக்கிறான்.

பேருந்து வரக்கூடிய நேரமாகி விட்டதால் போகும்வழியில் பேசிக்கொள்ளலாம் என்று கிளம்பினோம். அம்மாவிடம் வழியில் சாப்பிட்டுக்கொள்வதாகக் கூறிவிட்டேன்.

அமைதியாக வந்தவனிடம் நானே வார்த்தைகளைப் பிடுங்கும்படி ஆயிற்று.

" ஏம்ல இவ்ளோ டல்லா இருக்கே.. என்னாச்சு?..அப்பா கூட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார்.. "

சிரமத்துடன் ஒரு புன்னகையை அவன் பதிலாகக் கொடுத்தான். " உனக்கு என்ன பிரச்சினை? " என்று கேட்டபொழுது அமைதியாக இருந்தவன், " ஏதும் பொண்ணு மேட்டரா " என்றபொழுது மெதுவாக ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான்.

" அந்தப் பொண்ணும் உங்க காலேஜா? "

ஆமாம் என்றவன் கணநேர அமைதிக்குப்பின் " நானும் உங்ககிட்ட அதுபத்தி பேசணும்னு தான்ணே வந்தேன்.. இப்போ நேரம் இருக்குமான்னு தெரியல. நீங்க போய்ட்டு வாங்க. " என்றான்.

" பரவாயில்லடா. நீ சொல்லு. பஸ்தான் இன்னும் வரலியே " என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பேருந்து பள்ளிக்கூடத்தின் முன் திரும்பியிருப்பது தெரிந்தது. நான் ஓடிச்சென்றால் மட்டுமே பேருந்தை பிடிக்கமுடியும் என்றாகிவிட்டது.

" நாளான்னைக்கி மதியம் வந்திருவேம்ல.. வந்து பேசிக்கலாம்.. அதுவர எல்லாம் மறந்துட்டு சந்தோசமா இரு, சரியா..? " அவசரமாய்ச் சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன். பேருந்தில் ஏறிவிட்டு கைகாட்டியபொழுதும் கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன் அவன் அதே இடத்தில் நின்றிருந்தான்.

நான் சென்றபொழுது மாமா முற்றத்தை வெறித்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். சடங்குகள் எல்லாம் முடிந்திருந்ததை அவரது மழிக்கப்பட்ட தலை சொல்லியது. கழுவிவிடப்பட்டிருந்த முற்றமும் வீடும் இன்னும் காயாமல் ஈரமாகவே கிடந்தன.

என்னைப் பார்த்தவுடன் கண்ணில் கோர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். திண்ணையில் அவருக்கு அருகில் ஏதும் பேசாமல் உட்கார்ந்தேன். எப்பொழுதும் கிண்டல் பேசி கலகலப்பாக சிரித்தபடியே இருக்கும் அவர் அழுவதைப் பார்க்க மிகவும் சிரமமாக இருந்தது. சிறிதுநேரம் கழித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர், ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினார். தன் சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும் தனக்கு வாழப்பிடிக்காததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் எல்லோரும் தன்னை மன்னிக்கும்படியும் தன் கைப்பட எழுதியிருந்தான்.

என்னிடம் ஏதாவது சொல்லியிருந்தானா என்று கேட்டார். காதல் பிரச்சினை என்று மட்டும் சொன்னதாகச் சொன்னேன். நேற்று ஊருக்குப் போகாமல் இருந்திருந்தால் மேலும் சொல்லியிருப்பான் என்றேன்.

" நீங்களாவது ஊருக்குப் போகாம இருந்திருக்கக்கூடாதா.. " என்றபடி கண்ணீர் துடைத்துக்கொண்டு திண்ணையில் வந்தமர்ந்தார். பல வருடங்கள் தவமிருந்து பெற்ற ஒரே மகனை சிறுவயதிலேயே இழந்த தந்தைக்கான ஆறுதல் வார்த்தைகள் என்னிடம் ஏதுமில்லை. யாரிடமும் அவை இருக்கப்போவதுமில்லை.