Welcome!!


வேப்பமரம்

Sunday, September 28, 2008


















மாலையில் அண்ணனுடன் பேசியதிலிருந்தே மனதில் அதே எண்ணமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. சிறுவயது முதலே நான் அண்ணன் உட்பட எங்கள் தெருவில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் விளையாட்டுத்திடல் என்றால் அந்த வேப்பமரத்தடியும் அதை ஒட்டிய பெரிய காலிமனையும்தான். அந்த மரத்தடியில், அதன் கிளைகளில் விளையாடிய விளையாட்டுகள் இன்றும் மறக்காமல் பசுமையாகவே இருக்கின்றன.

கிராமத்து வீட்டை நினைத்தாலே முதலில் ஞாபகம் வருவது அந்த மரம்தான். வீட்டிற்கு முன்னால் மிகவும் அழகாக பசுமையாக இருக்கும். கொஞ்சமாய் வாசல் மறைத்தபடி நிற்கும். எங்கள் கிராமத்தில் வேப்பமரங்கள் அதிகம். அந்தத்தெருவிலே இத்துடன் சேர்த்து ஐந்தாறு மரங்கள் இருந்தாலும் இந்த மரம்தான் குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாக இருக்கும்.

வீடு பழைய ஓட்டுவீடாக இருந்தபொழுது கூரையிலும் இப்பொழுது மொட்டிமாடியிலும் காய்ந்த இலைகளும் பழங்களும் அதிகமாய் சேர்ந்துவிடும். மார்ச் மாதத்தில் மரம் முழுவதும் பூக்களாக இருக்கும். அதன் மிக மெல்லிய நறுமணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பூ உதிரும் காலத்தில் அம்மா கூரைமேல் துணி விரித்து அவற்றை சுத்தமாக சேகரிப்பாள். பூக்களை கொண்டு தேங்காய்த்துருவல் அதிகமாயிட்டு பொரியல் செய்வாள். சில நேரங்களில் ரசம் செய்வதற்கும் பயன்படுத்துவாள். எனக்கும் அப்பாவுக்கும் வேப்பம்பூ ரசம் மிகவும் பிடிக்கும். கோடைவிடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் காலத்தில் மரத்தில் இருக்கும் பழங்களைத் தின்பதற்கெனவே எங்கிருந்தோ விதவிதமான பறவைகள் வரும். சில சமயங்களில் தேனடைகள் கூட அந்த மரத்தில் இருந்திருக்கின்றன.

அந்த மரம் எப்பொழுது நடப்பட்டது , யார் நட்டது என்றெல்லாம் எனக்குத் தெரியாது, ஏன், அப்பாவுக்கே கூடத்தெரியாது. ஆனால் அது அவருடைய சிறு வயதிலிருந்தே அங்கு இருக்கிறது என்று கூறுவார். பழைய ஓட்டுவீட்டை இடித்து மாடியெடுத்து கட்டியபோதும் மரத்தை வெட்டவேண்டாமென முடிவு செய்து ஒரு கிளையைக்கூட வெட்டாமலேயே வீட்டையும் கட்டிமுடித்தார் அப்பா.

வாசல் விட்டிறங்கி நடக்க முடியாத சித்திரை வெயிலில் கூட அந்த மரத்தடியில் கயிற்றுக் கட்டில்போட்டு அமரலாம். அவ்வளவு குளுமையாக இருக்கும். மாலை நேரங்களில் நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது அம்மாவும் அப்பாவும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இரவில் திண்ணையிலோ மொட்டைமாடியிலோ என அந்த மரத்துடனே சாப்பிட்ட நிலாச்சோறும் கணக்கற்றவை.

அந்த மரத்தின் கிளைகள் மிகத்தாழ்வாக அமைந்திருப்பதால் ஏணி ஏறுவது போலவே சுலபமாக ஏறிவிடலாம். மரம் ஏறத்தெரியாதவர்கள் கூட ஏறும்படியாக இலகுவாக இருக்கும். நானும் அண்ணனும் மரம்வழியே மொட்டைமாடிக்கு ஏறிப்போவதும், அதன் கிளைகளைப்பிடித்து இறங்கி வருவதும் அடிக்கடி நடக்கும்.

அந்த மரத்திற்கு இப்பொழுது பிரச்சினை வந்திருக்கிறது. கிராமம் இப்பொழுது நன்றாக வளர்ந்து விட்டதால் அது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், அதை வெட்டச்சொல்லி பஞ்சாயத்து பரிந்துரை செய்வதாகவும் அண்ணன் சொன்னார். மேலும் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட இருப்பதால் அதற்கும் மரம் இடையூறாக இருப்பதாகவும் அதை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொன்னார்.

தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருப்பதை முற்றிலும் மறந்து வேப்பமரத்தின் நினைவில் மூழ்கிக்கிடந்தேன். 'என்னங்க, சாம்பார் சட்னி ரெடி, நீங்க பசிக்குதுன்னா சொல்லுங்க, தோசை ஊத்த ஆரம்பிக்கறேன்' என்றபடி என் கவனத்தை கலைத்தாள் விஜி. கடந்த எட்டு வருடங்களாக என் சுகத்திலும் துக்கத்திலும் தன்னையும் இணைத்துக்கொண்ட அன்பு மனைவி.

எனக்கு அருகிலிருந்த அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தான் அருண். ஆறு வயது நிரம்பிய ஆசை மகன். அவன்கூட இவ்வளவு நேரம் என் கவனத்தை கலைக்காமலிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது நோட்டுப்புத்தகத்தை எடுத்து பார்த்தேன். அவன் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துப்பயிற்சி உட்பட அனைத்தையும் முடித்திருந்தான். விஜியிடம் தோசை ஊற்றச் சொல்லிவிட்டு அருணின் புத்தகங்களை அடுக்கி வைக்க உதவிசெய்தேன்.


'விஜி, உனக்கு விசயம் தெரியுமா? நம்ம வீட்டு முன்னாடி இருக்குற வேப்பமரத்தை வெட்டப்போறாங்களாம்'

'ஏங்க, என்னாச்சு?, யாரு சொன்னா?'

'சாயந்தரம் அண்ணங்கிட்ட பேசினேன். அவர்தான் சொன்னாரு'

'எவ்ளோ பெரிய மரம். வீட்டு வாசல்ல ரொம்ப நல்லா இருக்கும். காத்தும் சிலுசிலுன்னு வரும். ஏன் இப்போ ஏங்க அத வெட்டணும்? அதுபாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே' அருண் தட்டில் சாம்பார் ஊற்றியபடி சொன்னாள் விஜி.

'அத வெட்டுறதுல வீட்டுல யாருக்கும் இஷ்டமில்லதான். இருந்தாலும் அந்த வழியா வாய்க்கால் வருதாம், அப்புறமா ரோடும் அகலப்படுத்தி தார் போடறாங்களாம். நம்மால ஏன் அடுத்தவங்களுக்கு இடைஞ்சல்? ஸோ, வெட்டிறதுதான் நல்லது'.

'அத வெட்டிட்டா வீடும் வாசலும் வெறிச்சோடிப்போகும்' விஜியில் குரலில் அனுதாபம் இருந்தது. விஜியிடம் எனக்கு மிகவும் பிடித்த குணமே அவளது இரக்க குணம்தான். தெருவில் யாராவது வயதானவர்களையோ பிச்சைக்காரர்களையோ பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தபின்னும்கூட அவர்களைப்பற்றியே புலம்பிக்கொண்டிருப்பாள். நான் இல்லாத சமயங்களில் கூட பிச்சை கேட்டு யாரும் வந்தால் பின்வாசலில் கூட்டிவந்து வாழை இலைவெட்டி சோறு போடுவாள்.

இரவு உணவு முடித்து சிறிதுநேரம் அருணுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அதன்பின், அவன் தூங்குவதற்காய் அவனறையில் சிறிதுநேரம் கதை வாசித்துவிட்டு அவன் தூங்கியவுடன் என் படுக்கையறைக்குச் சென்றேன். விஜி அடுக்களையில் பாத்திரம் தேய்த்துவிட்டு வந்திருந்தாள். சிறிது நேரம் அவளுடைய அலுவலக வேலை குறித்து பேசிக்கொண்டிருந்தாள். மிக மெல்லிய சத்தத்துடன் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க சற்றுநேரத்தில் எல்லாம் அவளும் தூங்கிப்போனாள். நான் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தேன்.

சென்னையில் குடியேறி சுமார் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. நல்ல உத்தியோகம். நகரின் ஒதுக்குப்புறமாய் நல்ல காற்றோட்ட வசதியுடன் சற்று பெரிய அளிவில் சொந்தமாய் ஒரு வீடு. விஜியும் வேலைக்குச் செல்வதால் வீட்டிற்கான வங்கிக்கடன் செலுத்துவதில் எந்தவித சிரமமும் இல்லை. அப்பாவும் அம்மாவும் இன்னும் கிராமத்தில்தான் வசிக்கிறார்கள். அண்ணன் கிராமத்தின் அருகிலுள்ள நகரில் வசிப்பதால் அடிக்கடி சென்று பார்த்துக்கொள்கிறார். அம்மா அப்பாவை இங்கு அழைத்துவந்த போதும் நகரவாழ்க்கை பிடிக்காமல் மீண்டும் கிராமத்திற்கே திரும்பி விட்டார்கள்.

இந்த பத்து வருடங்களும், அதற்கு முன்னால் கல்லூரி வாழ்க்கையுமே நான் கிராமத்தை பிரிந்த காலம். அப்பொழுதும்கூட மாதம் ஒருமுறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ என வார விடுமுறையில் கிராமத்திற்கு சென்று வருவது வழக்கம். சாயங்கால நேரம் வாசலோரம் மரத்தடியில் கயிற்றுக்கட்டில் போட்டு அமர்வது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அருணுக்கும் கூட அதே மரத்தடியில் நிறைய கதைகள் கூறியிருக்கிறாள் அம்மா.

அம்மா அடிக்கடி சொல்லுவாள். 'எந்த ஊருக்குப்போனாலும் நம்ம ஊரு மாதிரி இல்லடா.. நம்ம வீட்டு திண்ணையில அப்பாடான்னு உக்காந்தது போல இல்லடா..' என்று. எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டேன். இருந்தும் வேலைக்காகவும் வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளுக்காகவும் கிராமத்தை பிரிவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். கிராமத்தைப் பற்றியும் வேப்ப மரத்தைப்பற்றியும் ஏதேதோ யோசித்தபடியே எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கிப்போனேன்.

காலையில் எழுந்தபோது கடிகாரம் மணி ஆறு முப்பது எனக் காட்டியது. விஜி நியூஸ்பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள். அருண் அறைக்குள் எட்டிப்பார்த்தேன். அவன் இன்னும் எழுந்திருக்கவில்லை. அருகில் சென்று மெதுவாய் தலையை வருட விழித்துக்கொண்டான். 'குட்மார்னிங் டாடி' என்றான். அவன் காலைநேர முதல் வார்த்தை சற்று கரகரப்பாக இருந்தாலும் மிகவும் இனிமையாக இருந்தது. கிராமத்தின் அதிகாலை குயில்சத்தம் தரும் மனமகிழ்வை அவன் மழலைப்பேச்சு தரும். பெரும்பாலான நாட்களில் அதிகாலை எழுந்து நியூஸ்பேப்பர்கூட வாசிக்காமல் அவனுடன் விளையாடிக்கொண்டிருப்பேன்.

'சனிக்கிழம லீவுநாள் தானே, அவன எழுப்பாட்டிதான் என்ன' என்றாள் விஜி. அதில் எனக்கு உடன்பாடில்லை. காலையில் சீக்கிரமாக எழும் பழக்கத்தை அவனுக்கு கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். பாத்ரூம் சென்று பல்தேய்த்து முகம் அலம்பிவந்து தண்ணீர் குடித்தவுடன், விஜி சூடாய் தேனீர் தந்தாள்.

'விஜி, வாசல் பக்கம் அரளிச்செடிக்குப் பக்கத்துல ஒரு வேப்பமரம் வச்சா என்ன?' விஜியிடம் கேட்டேன்.

'ம்ம்.. வைக்கலாமே.. மரம் வளந்தா ரொம்ப நல்லாருக்கும்' என்றாள். 'நமக்கேன் இவ்ளோ நாளா இந்த எண்ணம் வரவேயில்ல?' என்றாள்.
'
காம்பவுண்டுக்குள் அமைந்த சிறிய தோட்டத்திலே கொய்யா, மாதுளை மற்றும் வாழை உள்ளது. இருந்தும் முன்னால் ஒரு வேப்பமரம் வைக்கலாம் என்ற எண்ணம் இப்பொழுதான் வந்திருக்கிறது.

தேனீர் குடித்துவிட்டு, பின்வாசல்சென்று மண்வெட்டி எடுத்துக்கொண்டு வேப்பங்கன்றுக்கு குழிவெட்ட ஆரம்பித்தேன். நந்தியாவட்டைக்கும் அரளிக்கும் நடுவில் இரண்டுக்கு இரண்டு என சற்று அகலமாகவே குழி அமைந்தது.

விஜி டிபன் சமைத்து முடித்திருந்தாள். குளித்து சாப்பிட்டுவிட்டு, அருணை அழைத்துக்கொண்டு வேப்பங்கன்று வாங்கச்சென்றேன். இரண்டு மூன்று நர்சரிகள் அலைந்து எங்கும் வேம்பு கிடைக்கவில்லை. கிராமத்தில் வீட்டைசுற்றிலும் களைபோல வளர்ந்துகிடக்கும் வேப்பங்கன்று. கடைசியாக பூந்தமல்லி சாலையில் ஒரு நர்சரியில் ஒரே ஒரு கன்று கிடைத்தது. இரண்டடிக்கு மேலே இருந்தது. அருண் தனக்குப் பிடித்ததாய் சொன்ன இரண்டு பூச்செடிகளும் வாங்கிக்கொண்டேன். பைக்கில் வரும்போது அவன் பள்ளியில் இருக்கும் மரங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தான். புதிய கன்றும் பூச்செடிகளும் வாங்கியது அவனுக்கு உற்சாகமாய் இருந்தது.

அருணிடம் கன்றைக்கொடுத்து குழியில் நடச்சொன்னேன். அவன் பிஞ்சுக்கைகளால் செடியை நட்டான். நான் சுற்றியுள்ள மண்ணை நன்றாக சீரமைத்து தண்ணீர் தேங்கும்டி பள்ளம் அமைத்தேன். அவன் கோப்பைகளில் கொண்டுவந்த நீரை ஊற்றினான். அவனும் தோட்டவேலைகளில் ஆர்வமாய் ஈடுபட்டது எனக்கும் விஜிக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. அவள் வாசலில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். வெட்டப்போகும் மரத்துக்கு பதிலா ஒரு மரம் நட்டியாச்சு என்றாள். நட்டது மட்டும் போதாது. நன்றாக நீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்றேன்.

'ஏன் டாடி, என்னய நட்டுவைக்கச் சொன்னீங்க?' இனிமையான மழலை பேச்சில் அருண் கேட்டான். 'மரத்துக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்' என்றேன். அவன் கொஞ்சம் வெட்கம் கலந்து அழகாய் சிரித்தான். மேலும், 'மனுசனுக்கு மரத்தோட உண்டான அனுபவங்கள் வாழ்நாள் முழுதும் பசுமையாவே இருக்கும்' என்றேன். விஜி என்னைப்பார்த்து புன்னகைத்தாள்.

நான் இரண்டாவதாய் கூறியது அவனுக்கு அப்பொழுது புரிந்திருக்காது. இருந்தும் ஒருநாள் நிச்சயம் புரியாமல் போகாது.

தானம்

Saturday, August 30, 2008




இன்று பிரதோசம் என்பதால் வழக்கத்தைவிட கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. போக்குவரத்து சாலைகளை சற்று ஆக்கிரமித்தே நிறுத்தப்பட்டிருந்தன வாகனங்கள். அக்கா பூஜைக்கு தேவையான சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தாள். நானும் மாமாவுடன் தெற்குவாசலில் காத்திருந்தோம். அதுதான் வீட்டிலிருந்து அருகாமையில் அமைந்திருக்கும் பெரியகோயில் வாசல் என்பதால் வீட்டிலிருந்து யார் கோவிலுக்கு சென்றாலும் அந்தவாசல் வழி செல்வதுதான் வழக்கம்.

தனக்கும் மாமாவுக்கும் சேர்த்து இரண்டு நெய் விளக்குகள் வாங்கியிருந்தாள் அக்கா. எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்தே மாலை, பூஜைப்பொருட்கள் வாங்குவதற்கும் கட்டணமில்லாமல் காலணி விட்டு வருவதற்கும் கோயிலை ஒட்டியிருந்த அந்த பூக்கடைதான் எங்களின் வழக்கமான கடையாய் இருந்து வருகிறது. அக்கா எப்பொழுதுமே எனக்காக அர்ச்சனை சீட்டோ, விளக்கோ எதுவும் வாங்குவதில்லை. அது எனக்குப் பிடிக்காது என்பதும் அவளுக்கு நன்கு தெரியும். சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் மீது எனக்கு அவ்வளவாக அக்கறை கிடையாது என்பதும், நான் நாத்திகன் இல்லை, அதே வேளையில், சமயம் கடவுள் மீதான என் நம்பிக்கைகள் வேறுபட்டவை என்பதும் நன்றாகவே அறிவாள். இருபத்திநான்கு வருடம் கூடவே இருக்கும் தம்பியை வீட்டில் அனைவரை விடவும் நன்கு புரிந்துவைத்திருப்பவள் அவள்.

மாமா, நெல்லை டவுணில் ஒரு அரசு வங்கியில் துணை மேலாளர். தினமும் சுத்தமல்லியிலிருந்து அலுவலகத்திற்கு பயணம் செய்வது கஷ்டமான விஷயம் என்பதால், எங்கள் வீட்டு மாடி போர்ஷனில் அக்காவுடன் தனிக்குடித்தம் இருப்பவர். அப்பா மறுக்கும் பொழுதும் வாடகையை வழக்கமாக வங்கிக்கணக்கில் செலுத்திவிடுபவர்.

வெளிப்பிரகாரத்திலேயே கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது. கொடிமரத்தின் வலதுபக்க விளக்குமேடையருகே சென்று விளக்கேற்றுவது கூட சற்று சிரமமான விசயம்தான். எனவே தனது இரண்டு விளக்குகளையும் ஏற்றி கொடிமரத்தின் அருகிலேயே வைத்தாள் அக்கா. 'இங்கே விளக்கேற்றக்கூடாது' என்ற எண்ணெய் வழியும் ஒரு போர்டை அலட்சியம் செய்தபடி ஏற்கனவே பலவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.

கருவறையில் தொடங்கிய தரிசன வரிசை, உள்பிரகாரத்தை ஒரு முறை சுற்றிக்கொண்டு வெளிபிரகாரம் வரை நீண்டிருந்தது. வரிசையை ஒழுங்குபடுத்தி விடுவதில் சில காவலர்கள் ஈடுபட்டிருந்தார்கள். வரிசையைப் பார்த்து மலைத்து நின்றிருந்தார் மாமா.

'ஸ்பெஷல் கியூவில போனா சீக்கிரம் வந்துடலாங்க' என்றாள் அக்கா.

'போகலாம்தான். அதுக்கு உன் தம்பி ஒத்துக்கமாட்டானே' என்றார் மாமா. அவர் சற்று எரிச்சலுடன் சொல்லியதுபோல் எனக்குத் தோன்றியது.

'பரவாயில்க்கா.. எனக்கு எதுவாயிருந்தாலும் சரி' என்றேன். எனது நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் அடுத்தவரை பாதிக்கும் பட்சத்தில் அதை தளர்த்திக்கொள்வதும் என் வழக்கம்.

'சரி, ஸ்பெஷல் கியூவிலே போயிடலாம்' என்றார் மாமா. இரசீது வாங்குவதற்காய் அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

மாமா என்ன நினைத்தாரோ இரசீது வாங்கச் சென்ற என்னை திரும்ப அழைத்தார். 'சூரி, இங்க வேணாம், வாடா.. எப்படியும் இரசீது முப்பது ரூவா ஆகும். ஸ்பெஷல் கியூவும் நீளமாத்தான் நிக்குது. பேசாம நீலகண்டன் சாமியை பாத்து அம்பது ரூபா குடுத்தா நல்லா தரிசனம் காட்டிடுவார் ' என்றார். நான் அமைதியாக தலையாட்டிவிட்டு நின்றேன். எனது கோட்பாடுகளைத்தான் நான் இன்றைக்கு மாத்திரம் நான் ஏற்கனவே மூட்டைகட்டி வைத்தாகிவிட்டதே. அக்காவின் கையில் ஐம்பது ரூபாயை திணித்துவிட்டு அமைதியாகிக் கொண்டேன்.

நீலகண்டன் அதே கோயிலில் பணியாற்றுகிறவர். அர்ச்சகர். எப்பொழுதும் நவக்கிரக சந்நிதியில் தான் அவரது வழக்கமான வேலை. எங்களுக்கோ எங்கள் உறவினர்களுக்கோ கணபதி ஹோமம் முதலான விசேஷங்களை அவர்தான் நடத்திக்கொடுப்பார். இதுபோன்ற கூட்டம் வழியும் நாட்களில் அவரைபார்த்து ஐம்பதோ நூறோ கொடுத்துவிட்டால் போதும். கருவறைக்கு மிக அருகில் கொண்டுபோய் நிறுத்திவிடுவார். சுவாமி கழுத்திலிருந்து மாலை சகிதம் பிரசாதமும் வாங்கித்தருவார்.

உள்பிரகாரத்திலிருந்து பக்தர்கள் வெளிவரும் வழியில் உள்ளே நுழைந்து வலப்பக்கமாக திரும்பி நவக்கிரக சன்னிதியை அடைந்தோம். அங்கே நீலகண்ட சாமிக்குப்பதிலாக வேறுயாரோ தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார். அக்கா அவரிடம் விசாரித்தாள்.

'இங்கே, வழக்கமாக இருப்பாரே, நீலகண்டன் சாமி..'

'ஓ, அவரா, அவர் இப்போ அம்பாள் சன்னிதிக்கு போயாச்சே..' என்றவர், 'என்ன, தரிசனம் பண்ணனுமா' என்று கேட்டார் சற்று குரலை தாழ்த்தி.

மாமா ஆமென்று என்று சொல்ல, 'நான் ஏற்பாடு பண்ணிடறேன்' என்றவர் மடியிலிருந்து செல்போன் எடுத்து யாருடனோ பேசினார். பேசும்போது திரும்பி மூன்று பேரா என விரல்காட்டி ஊர்ஜிதம் செய்துகொண்டார். பேசிமுடித்து, 'செத்த நிமிஷம் பொறுங்கோ, நம்ம பையன் வந்துண்ருக்கான்.நெல்லையப்பரையும் காந்திமதியையும் பேஷா காட்டிடுவான்' என்றார்.

சற்றுநேரத்தில் அங்கு வந்த சிறுவயது குருக்கள் தன்னை பெயர் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். பின் எங்களை நேராக சுவாமி சந்நிதிக்கு அழைத்து சென்றார். ஸ்பெஷல் கியூவிற்கும் மிக அருகில், கருவறையின் வாசல் பக்கமாய் எங்களுக்கு வழிவிடப்பட்டது. நாங்கள் தரிசனம் செய்துகொண்டிருக்க எங்களை அழைத்து வந்தவர் வரிசை ஒழுங்கு செய்துகொண்டிருந்த காவலருடம் நட்பாய் பேசிக்கொண்டிருந்தார்.

சிறப்பு ஆரத்தி காட்டப்பட்டது. மாமாவும் தீபத்தட்டில் கணிசமாக காணிக்கை போட்டார். கருவறையின் மிக அருகில் சிறப்புத் தரிசனத்தின் பொருட்டு நிற்பதால் அத்தொகை போட வேண்டிய கட்டாயமும் இருந்தது. பிரசாதத்துடன் கொடுக்கப்பட்ட பிச்சிப்பூ மாலையில் ரொம்பவே சந்தோசமானாள் அக்கா.

வரிசையில் காத்திருந்து வந்தவர்கள் நெற்றி வியர்வை துடைத்தபடியே தரிசனம் முடித்து நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் எங்களை கோபத்துடன் பார்ப்பதாகவே பட்டது எனக்கு. அப்பொழுது எனக்கு தரிசனத்தில் ஆர்வமில்லாமல் இருந்தது. மனதில் கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் இருந்தது.

சுவாமி தரிசனம் முடிந்து அழைத்துசென்றவர் அம்பாள் சந்நிதியிலும் நல்ல தரிசனம் காட்டினார். அங்கும் நல்லமுறையில் தரிசனம் முடித்து காணிக்கையிட்டு திரும்பினோம். அம்பாள் சந்நிதியில் பிரசாதத்துடன் வாங்கிய அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டாள் அக்கா. உள்பிரகாரத்தில் நுழைந்துபொழுது கைகுட்டை எடுத்து வியர்வை துடைத்துக்கொண்டார் மாமா. அருமையான தரிசனம் என்றார். பிரதோச நாளில் இவ்வளவு அருமையாக இதுவரை தரிசனம் கிடைத்ததில்லை எனவும் சொல்லிக்கொண்டார். அவர்கள் இருவரின் மகிழ்ச்சியும் நிறைவும் அவர்களின் முகத்தில் தெரிந்தன.

அக்கா பணப்பை பிரித்து ஐம்பது ரூபாய் எடுத்துக் அந்த குருக்களிடம் கொடுத்தாள். அவர் பார்த்துவிட்டு ' வழக்கம் நூறு ரூபாய்' என்றார் புன்னைகையுடன். மாமா 'ஓ அப்படியா?' என்றபடி தன் பர்ஸை பிரித்து ஐம்பது ரூபாய் எடுத்துக்கொடுத்தார். குருக்களிடம் செல்போன் நம்பர் வாங்கி தன் தன் செல்போனில் குறித்துக்கொண்டார். அதன்பின், அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளிபிரகாரம் சுற்ற ஆரம்பித்தோம். நாகர் சந்தியில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு வாசலுக்கு வந்தோம்.

வாசலின் இருபுறமும் குழுமியிருந்தார்கள் வழக்கமான பிச்சைக்காரர்கள். உடல் ஊனமுற்றோர்களாகவும், வயதானவர்களாகவே இருந்தார்கள் அனைவரும். சுமாராக பதினைந்துபேர் இருக்கும் அக்கூட்டத்தில் ஒருவரிடம் இருபது ரூபாய் கொடுத்து அனைவரும் பகிர்ந்துகொள்ளச்சொன்னேன்.

பூக்கடையில் காலணிகள் தேடி அணிந்துகொண்ட அக்கா திரும்பி என்னை ஒரு அர்த்தப்பார்வை பார்த்துவிட்டு இயல்பானாள். மாமாவோ சட்டென ஒருகணம் திரும்பிப்பார்த்தார். 'காசு என்ன மரத்துலயா காய்க்குது? பாத்து செலவு பண்ணுடா' என்றார். 'காசோட அருமை அது இல்லாட்டித்தான் தெரியும்' என்றபடி அக்காவிடம் திரும்பி முணுமுணுத்தார்.

உள்ளே ஐம்பதும் நூறுமாய் காணிக்கையிட்டு பிச்சைக்காரர்களுக்கான தானத்தில் கணக்குபார்க்கும் மாமாவை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். மேலும் அந்த பிச்சைக்காரர்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே பரிதாபப்பட்டேன்.

பிஜு

Sunday, August 10, 2008




இத்துடன் பதினான்கு மாதங்கள் கடந்துவிட்டன. சென்றமுறை விடுப்பில் வந்திருந்த பொழுதே தெங்கமம் சென்று விசாரித்துவர நினைத்தேன். இருந்தும் முடியவில்லை. பிஜு இறந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தநிலையில் அங்கு சென்று விசாரிப்பது ஆறும் ரணத்தை கீறிப்பார்ப்பது போலாகுமோ என தயங்கினேன். மேலும் நேரில் சென்று விசாரிக்காதது இன்றுவரைக்கும் மனதில் ஒரு குற்ற உணர்வாகவே இருந்து வருகிறது. இந்தமுறை கண்டிப்பாக போய்வர வேண்டும். அபியும் என்னுடன் வருவதாக சொல்லியிருந்தான்.

பிஜு நான் மற்றும் அபி சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தோம். இடையில் எத்தனையோ நண்பர்கள் சேர்ந்தும் பிரிந்தும் போயிருந்தாலும் நாங்கள் மூவரும்தான் பிரியாமலேயே இருந்தோம். எனது கல்லூரி படிப்பிற்காக எங்கள் குடும்பம் அருகிலுள்ள நகரத்திற்கு இடம்பெயர்ந்தது. அதன்பின்னும் அடிக்கடி போன்பேசுவது மூலமாகவும் வாரயிறுதி சந்திப்புகள் மூலமாகவும் தொடர்ந்தது எங்கள் நட்பு.

நான் வேலைக்காய் கத்தார் கிளம்பும்போது வழியனுப்ப சென்னை வந்திருந்தான் பிஜு. அப்பொழுதுதான் அவனை கடைசியாக பார்த்தது. அப்பொழுதும் சரி, அதன் பின் போனில் பேசும்போதும் சரி, தனக்கும் கத்தாரில் ஒரு வேலை பார்க்கசொல்லுவான். ஆனால் அவன் அம்மா அவனை எங்கும் அனுப்ப தயாராயில்லை என நன்றாக தெரிந்தே நான் அதுபற்றி முயற்சி ஏதும் எடுத்திருக்கவில்லை.

பிஜுவுக்கு சிறுவயதிலிருந்தே இதயத்தில் ஏதோ பிரச்சினை. அதற்காக அவன் தொடர்ந்து மருந்தும் உட்கொண்டிருந்தான். எங்களுக்கு விபரம் தெரிந்த வரையில் அதனால் அவனுக்கு எந்தவித தொந்தரவும் இருந்தது இல்லை. இருந்தும் அது அவன் உயிரை பறிக்குமளவு கொடூரமாய் அமையும் என நாங்கள் யாருமே நினைக்கவில்லை.

அந்த மலைச்சாலையில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் நான்கு வீடுகளில் அவன் வீடும் ஒன்று. பாதையின் இருபுறமும் ரப்பர் தோப்புகள் அடர்ந்திருந்தன. சாலையோரங்களில் அன்னாசிப்பழங்கள் அதிகமாக பழுத்திருந்தன. இந்தத்தோப்புகள் எல்லாம் ஒரு காலத்தில் பிஜு வீட்டுக்கு சொந்தமானது தான்.

இடுப்பில் செருகப்பட்ட அரிவாளுடனும் புல்கட்டு சுமந்துசெல்லும் ஒரு பெண் சாதாரணமாக என்னை கடந்து முன்னேறி சென்றாள். அபியும்கூட சாதாரணமாக ஏறி விட்டான். எனக்குத்தான் மூச்சுவாங்கியது.
பிஷுவின் அம்மா வாசலிலிருந்தே எங்களை கவனித்திருக்க வேண்டும். எங்களை வரவேற்கும் பொருட்டு சாலையில் கொஞ்சம் இறங்கிவந்து புன்னகையுடன் நின்றார். நானும் மூச்சுவாங்கியபடியே ஒருவழியாக ஏறினேன்.

'என்ட ஈஸ்வரா, ஆரா வருந்நது? ஈ புள்ளாருக்கு இந்நெங்கிலும் இவ்விட வரானுள்ள வழி அறிஞ்ஞல்லோ' என்றபடியே எனது கைகளை இறுகப்பற்றிக்கொண்டார். அந்த ஒருகணத்தில் என்ன பேசுவது எனத்தெரியாமல் புன்னகைத்தபடியே நின்றேன் நான்.

என்னையும் அபியையும் நலம் விசாரித்தபடியே வீட்டுக்குள் அழைத்துசென்றார். நாற்காலி எடுத்துப்போட்டு அமரச்சொன்னார். இருந்த ஒரு நாற்காலியில் அபியை அமரச்சொல்லிவிட்டு அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தேன்.

'போன தடவயே நான் வராம போனதுக்கு என்மேல கோபம் ஏதும் இல்லியேம்மா?'

'ஆ... அங்ஙன ஒன்னுமில்லா.. எண்ட மக்களெ எனிக்கு அறியத்தில்லியோ' என்றார் மலர்ந்த புன்னகையுடன்.

கட்டிலில் என் அருகிலேயே அமர்ந்தார். என்னை கண்டதில் அவரது மகிழ்ச்சி முகத்தில் நன்றாக தெரிந்தது. அதேசமயம் அவர்களின் முகத்தில் இழையோடியிருந்த சோகமும் தெரியாமல் இல்லை.

அவரின் தலைக்கு பின்னால் சிரித்தபடி இருந்தான் பிஜு. படத்தில்தான். அதன் கீழே அவனுக்கு மிகவும் பிடித்த அவன் புல்லாங்குழலும் இருந்தது. அவன் விரல்களின் ஸ்பரிசங்களை அதிகம் கண்டிருந்த அது இப்பொழுது அந்த குடும்பத்தில் பொக்கிசமாய் இருக்க வேண்டும். அருகிலேயே ஒரு விளக்கும் அடிக்கடி மின்னிக்கொண்டேயிருந்தது.

அவன் இறந்தநாளின் முந்தையநாள் மருத்துவனை நிகழ்ச்சிகளெல்லாம் கண்ணீருடனே கூறினார். நானும் பேச வார்த்தைகள் ஏதுமில்லாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தேன். அபி அங்கு அடிக்கடி செல்பவனாதலால் எழுந்து முற்றத்தில் சென்று நின்றுகொண்டான். என் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக்கொண்டிருந்தன. அதிகமாய் தொண்டை அடைத்தது. அவ்வப்போது மௌனம் நிலவியது.

என்னையும் பேசி அழவைப்பது அவருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, கண்ணீர் துடைத்துக்கொண்டு வேறுபேச்சு பேச ஆரம்பித்தார். இருந்தும் அவரது கண்கள் கலங்குவதை நிறுத்துவதாயில்லை. அதற்குமேல் உட்காரமுடியாமல் மார்பின்மேல் கிடந்த துண்டால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே எங்களுக்கு சாயா போடுவதாக சொல்லி அடுக்களை சென்றார்.

சாயா குடித்து முடிக்கும்போதுதான் உள்ளிருந்து பாட்டியின் குரல் கேட்டது.

'ஆராடி அது?.. பிரவிணானோ?'

'ஆமா பாட்டி, எப்படி இருக்கீங்க? '

'எனிக்கெந்தா? நி எப்போலு வந்நு? கண்டிட்டு ரெண்டு வருசம் ஆயில்லோ மோனே?' என கேட்டபடி மார்பின் கச்சையை இறுக்கி முடிந்துகொண்டே வந்த பாட்டியை கைபிடித்து கட்டிலில் அமரவைத்தார் அம்மா.

எண்பது வயதை தாண்டியிருக்கும் பாட்டிக்கு. எனக்கு விபரம்தெரிய அவருக்கு கண்கள் தெரிவதில்லை. இருந்தும்கூட இந்தவயதிலும் தோட்டத்திலும் வீட்டிலும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். அம்மாவைவிட பிஜுவின் மீது உயிரையே வைத்திருந்தவர். அவர் செய்யும் மீன்குழம்பு என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

வீட்டின் முன்னால் இருக்கும் தோப்புகள் அனைத்தும் பாட்டியின் பூர்வீக சொத்துதான். அனைத்தும் பிஜுவின் மருத்துவச் செலவுக்காகவே விற்கப்பட்டன. அம்மாவும் வழக்கமாக முந்திரி பண்ணையில் இரண்டு ஷிப்ட் வேலை பார்ப்பார். வார விடுமுறை நாளில் கூட லேகியம், வடகம் செய்வதுமாக கஷ்டப்படுவார். அப்படியிருந்தும், அந்த மருந்தும்கூட அவனை குணப்படுத்தவில்லை என்பது மிக வருத்தமானது.

எனது வேலைகுறித்தும் விடுமுறை நாட்கள் குறித்தும் கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா. கத்தார் செல்ல வேண்டுமென பிஜு மிகவும் விரும்பியதாகவும், என்னுடன் ஒரு ஆறு மாதமாவது அனுப்பியிருக்கலாம் என்றும் கூறினார். கொஞ்சம் சிரிப்புடனும் கொஞ்சம் வருத்ததுடனும் கழிந்த அந்த உரையாடலின் ஒவ்வொரு வாக்கியத்திலும் பிஜூ இல்லாமல் இல்லை.

அம்மாவுடன் பேசிய வண்ணம் இருந்தாலும் நான் பாட்டியை கவனித்துக்கொண்டே இருந்தேன். நாங்கள் பேசிக்கொண்டேயிருக்க பாட்டி சுவற்றில் தடவிப்பார்த்து அவனின் புல்லாங்குழலை எடுத்து கையில் வைத்துக்கொண்டார். அவரது விரல்கள் புல்லாங்குழலின் துளைகளை ஒவ்வொன்றாய் தடவிக்கொண்டே வந்தது. கடைசித்துளையை தடவி முடிக்கும் தருணம் பார்வையில்லாத அவர் கண்களிலிருந்து ஓர் துளி கன்னத்தில் வேகமாய் உருண்டோடி மார்க்கச்சையில் விழுந்து காணாமல்போனது.

இன்னும் படத்தில் புன்னகைத்தபடியே இருந்தான் பிஜு.

ஊமச்சி

Saturday, May 3, 2008

--1--

அதிகாலையிலேயே போன் செய்திருந்தாள் அம்மா. எதிர்த்த அறை நண்பன்தான் கதவைத்தட்டி சொல்லிவிட்டுப்போனான். வழக்கமாக சனிக்கிழமை இரவில் தான் அம்மா அழைப்பது வழக்கம். இன்று என்ன காலையிலேயே போன் என நினைத்துக்கொண்டே மாடிப்படிகள் இறங்கினேன். மெதுவாய் விடிந்து கொண்டிருந்த காலை வாசலுக்கு வெளியே மங்கலாகத்தெரிந்தது. விடுதித்தொலைபேசிக்கு சற்று தள்ளியே வாட்ச்மேனும் இரு மாணவர்களும் செய்தித்தாளில் மூழ்கிப்போயிருந்தார்கள்.

எனக்காக சுவரில் சாய்ந்தபடியே காத்துக்கொண்டிருந்தது ரிசீவர். எடுத்துக் காதில் வைத்து ஹலோ என்றேன்.

'சூர்யா, நல்லா இருக்கியாடா?' அம்மா கேட்டாள்.

நான் நல்லா இருக்கேம்மா. நீ எப்படிம்மா இருக்க? என்ன, இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க? வழக்கமா ராத்திரில தானம்மா போன் பண்ணுவ?
ஏதாவது பிரச்சினையாம்மா? கொஞ்சம் பதட்டத்துடனே நான்.

'வேற ஒன்னும் இல்லடா, நம்ம மேலவீட்டு சுப்பையா தாத்தா நேத்து ராத்திரி தவறிட்டாரு. அதுதான் உங்கிட்ட சொல்லலாமேன்னு கூப்பிட்டேன்.'

'என்னம்மா சொல்றே? போனவாரம் நான் வீட்டுக்கு வந்தப்ப கூட நல்லாத்தான இருந்தாரு? என்னாச்சு?'

'நேத்து காலையில கூட கடைத்தெருவுக்கு போயிட்டு வந்தவர்தான். சாயங்காலமா நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லியிருக்காரு. அப்புறமா ஆஸ்பிட்டல் போன கொஞ்ச நேரத்துலயே...அதுதாண்டா, நீ வரணும்னு விருப்பபட்டா உடனே கிளம்பி வா. இல்லேன்னா அடுத்தவாரம் வழக்கம் போல வந்தா போதும்ன்னு சொல்லலாம்னுதான் கூப்பிட்டேன்.'

'சரிம்மா நான் வந்துடறேன். எப்படியும் பதினோரு மணிக்கெல்லாம் வந்துடுவேன். ஆமா, ஊமச்சி ரொம்ப அழுதுவுதாம்மா? '

'ஆமா, அதோட தலையெழுத்து எப்படியோ அப்படித்தான் நடக்கும். நாம என்ன செய்ய முடியும்? அது சரி, நீ வரும்போது மறக்காம உன்னோட அழுக்குத்துணி எல்லாம் எடுத்துட்டு வா. நான் துவைச்சு வைக்கிறேன்.'

பேசி முடித்து ரிசீவரை வைத்தபின்பு மனது கனத்தது. அப்பொழுதும்கூட என்னால் முழுமையாக நம்பமுடியவில்லை. எல்லாமே அதிகாலையில் கனவா என்று கூட தோன்றியது.

வெளியில் மாடிப்படிகள் தாண்டி என் அறையை அடைந்தபின்னும் கூட ஊமச்சிதான் மனதில் அழுதுகொண்டே இருந்தாள்.

--2--

அவரசமாய் கிளம்பி பேருந்து நிலையத்தை அடைந்தபோது சூரியன் சுட ஆரம்பித்திருந்தான். அந்த காலையில் அதிக கூட்டம் இல்லாமலும் ஆரவாரம் இல்லாமலும் இருந்தது பேருந்து நிலையம். பேருந்து நிலையத்தை ஒட்டிய டீக்கடையில் ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு எனக்கான பேருந்தைத் தேடினேன். அது நிலையத்தின் அடுத்த வாயிலோரம் அதிகமாய் உருமிக்கொண்டும் கொஞ்சமாய் புகை கக்கிக்கொண்டும் நின்றது.

பேருந்தின் பெரும்பாலான ஜன்னலோர இருக்கைகள் காலியாகவே இருந்தன. அதில் வசதியான ஒன்றில் அமர்ந்தேன். சற்றுநேரத்தில் பேருந்து நகரத்தொடங்க என் நினைவுகளில் மீண்டும் ஊமச்சி வந்த அமர்ந்துகொண்டாள்.

ஊமச்சி, எங்கள் பக்கத்து வீட்டுப்பெரியவரின் மகள். சுருள் முடி, கம்மியான உயரம், கொஞ்சம் முரடான உடல். வயது சரியாகத்தெரியாது. ஆனால் சுமார் முப்பதைத்தொட்டிருக்கலாம். எங்கள் கிராமத்தில் அவளது பெயரைத் தெரிந்தவர்கள் அதிகப்படியாக பத்து பேர் கூட இருக்கமுடியாது. அனைவருக்கும் அவள் ஊமச்சிதான். நானே சில வருடங்களுக்கு முன்புதான் அம்மாவிடன் கேட்டு தெரிந்துகொண்டேன்.

அவளது அப்பா, அந்த பெரியவர், அந்தக்காலத்தில் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். மேலும் அவளின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். அனைவரும் எங்கள் கிராமத்திலேயே வசதியான வாழ்க்கையில் இருக்கிறவர்கள். அவர்கள் யாரும் அவளைப்பற்றி அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை. இருந்தும் இவள்தான் அவர்கள் அனைவரது வீட்டிலும் துணி துவைப்பாள். தலையிலும் இடுப்பிலும் என நீர் சுமப்பாள். கொல்லைப்புறத்தில் பாத்திரம் தேய்ப்பது என எல்லா வேலைகளும் செய்வாள்.

அவள் மீது அதிகமாய் அன்பு வைத்திருப்பதும் மிகவும் அக்கறைப்படுவதும் பெரியவர் மட்டும்தான். சிறுவயதிலேயே அவளது அம்மா இறந்துவிட்டதாலும் அவளால் வாய் பேச முடியாமல் போனதாலும் அவர்தான் அவளை அன்பாய் கவனித்துக்கொள்வார். வெளியூர் சென்று வரும் ஒவ்வொரு முறையும் வாங்கிவரும் மிட்டாய், சேவை அவளுக்குத்தான் கொடுப்பார். அவர் ஊமச்சியை பார்த்துக்கொள்வதுபோல் தன் பேரக்குழந்தைகளைகூட பார்ப்பதில்லை என குறை கூறுவார்கள் அவரது மற்ற பிள்ளைகள்.

ஊமச்சிக்கு கொஞ்சமாய் காது கேட்கும் என அம்மா சொல்லியிருக்கிறாள். ஆனால் அவளது பேச்சு வெறும் இரைச்சலாக இருக்கும். கரகரப்பான குரலில் ஆ, ஊ என்று கத்துவதுதான் அவளுக்கு தெரிந்த பேச்சு. ஊரில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்பாள். பெரும்பாலும் அவளது இரைச்சல் எரிச்சலூட்டுவதாக இருக்கும். அவள் ஆரம்பித்த பேச்சையும் விரைவில் முடிக்கமாட்டள். அதனாலேயே அவளைக்கண்டாலே ஓடுபவர்களும் உண்டு. மேலும் அவளை ஏளனம் செய்து சிரிப்பதற்காகவே அவளை சீண்டுபவர்களும் உண்டு.

பயணச்சீட்டு வாங்கச்சொல்லி என் கவனத்தைக் கலைத்தார் நடத்துனர். ஊர்ப்பெயர் சொல்லி சீட்டு வாங்கினேன். கொடுத்த நூறு ரூபாயில் மீதப்பணத்தை இறங்கும் போது வாங்கிக்கொள்ளச் சொன்னார் நடத்துன்ர்.

பெரும்பாலான நடத்துனர்களின் மாமூலான இந்த செயலில் எத்தனையோ தடவை தோற்றுப்போயிருக்கிறது என் மறதி. இன்றாவது இறங்கும் போது மறக்காமல் இருக்க வேண்டுமெனெ மனதில் நினைத்துக்கொண்டேன்.

ஜன்னலின் வழியே என்மேல் அப்பிக்கொண்டிருந்தது குளிர்காற்று. ஜன்னலை இழுத்து சாத்திவிட்டு சீட்டில் வசதியாக சரிந்து அமர்ந்தேன்.

----3----

அன்று முதன்முதலாக அந்த வீட்டில் நடந்த சண்டை எனக்கு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.

அவரது மகன்களில் மூத்தவன் தான் சண்டையை ஆரம்பித்தான். அதற்கு முந்தைய சில தினங்களில் தான் நிலங்களை எல்லாம் சரியாக பிரித்து பத்திரம் எழுதினார்கள். நிலத்தை தன் பிள்ளைகள் அனைவருக்கும் சரியாக பிரித்துக்கொடுத்ததாக கேள்வி. வீட்டை மட்டும் ஏன் பிரிக்கவில்லை என்றுதான் அந்த சண்டை.

அவர்கள் பேசிக்கொள்வது அனைத்தும் எங்கள் வீட்டில் நன்றாகக் கேட்டது. அப்படி சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இல்லை, சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டை எப்பொழுதும் யாருக்கும் பிரித்துக்கொடுக்கப்போவதில்லை. அது சின்னவளுக்கு மட்டும் தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அந்த பெரியவர். சின்னவள் அங்கே ஊமச்சிதான் என்பதில் எனக்கும் அம்மாவுக்கும் கொஞ்சமாய் சந்தோசம். அது அவளது எதிர்காலத்தில் அவளுக்கு உதவியாய் இருக்கும் என நம்பினோம்.

அந்த சண்டைக்கு நடுவிலும் ஊமச்சியின் சத்தம் எனக்கு நன்றாகவே கேட்டது. அவரது மகன் ஊமச்சியை தங்கை என்றும பாராமல் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தெருவில் இறங்கி நடந்தான். அதன்பிறகு அவர்கள் அந்த வீட்டு பிரச்சனையை எப்படி முடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

ஊமச்சி அதிகமாய் கத்துவாள். அதுதான் அவளுக்குத்தெரிந்த பேச்சு. குழந்தைகள் தெருவில் கோலிக்குண்டு விளையாடினால் வேலைகளை எல்லாம் போட்டுவிட்டு ஓடி வருவாள். மேலும் குழந்தைகள் பம்பரம் சுற்றுவதை வேடிக்கை பார்ப்பதென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம். விளையாட்டின்பொழுது யாரும் கோலிக்குண்டோ பம்பரமோ சரியாக அடித்தாலும் சிரிப்பாள். தவறவிடும்போதும் சிரிப்பாள். அவளை பொறுத்தவரையில் பாராட்டும் கேலியும் ஒன்றுதான்.

நான் கல்லூரியின் முதலாண்டில்தான் அம்மாவையும் அந்த ஊரையும் முதன்முதலாய் பிரிந்த பொழுதுதான் ஊமச்சி பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். நான் விடுதிக்கு கிளம்பிய அந்த நாளில் என்னை வழியனுப்ப ஊமைச்சியும் இருந்தாள். அவள் சைகைகள் மூலமாகவும் , அவள் பாஷையில் கத்திக்கொண்டும் அவள் சொல்லிய அறிவுரைகள் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. நல்லா சாப்பிடு, போன் பண்ணு, என்று சாதாரணமாக கூறினாலும் அப்போதைய அவளின் ஒவ்வொரு பேச்சின் முக பாவங்களையும், உணர்ச்சிகளையும் கூர்ந்து கவனித்தேன். அதை என்னால் மறக்கவே முடியாது. அப்பொழுது அவள் கண்களும் கொஞ்சம் கலங்கியிருந்தன. அப்பொழுதான் புரிந்துகொண்டேன். அவள் எப்பொழுதுமே ஒப்புக்குப்பேசுவதில்லை. நடிப்பதும் இல்லை. மேலும் இது எல்லாம் அவளுக்குத் தெரியவும் தெரியாது.

நான் விடுதியிலிருந்து அம்மாவுடன் போனில் பேசும் சில நேரங்களில் அவளும் பேசுவாள். அம்மாவிடம் ரிசீவரை வாங்கி பேசும்பொழுது அவள் நலம் விசாரிப்பதாக நான் யூகித்துக்கொண்டு நான் நன்றாக இருக்கிறேன் என்பேன். அவளும் சிரித்துக்கொண்டு அம்மாவிடம் ரிசீவரைத் தருவாள்.

இப்பொழுது ஊமச்சியை நினைத்துக்கொண்டேன். இந்நேரம் அவள் அழுதுகொண்டிருப்பாள். அனைவரும் அவளை சமாதானம் செய்ய முயற்சிக்கக்கூடும். இல்லை, அவளுக்கு சமாதனம் சொல்லக்கூட அம்மாவை விட்டால் யாரும் இல்லாதிருக்கவும் கூடும்.

----4----

நான் இறங்க வேண்டிய நிறுத்ததில் பேருந்து நின்றது. என் தோள்பையை எடுத்துக்கொண்டு இறங்கினேன். மதியம் நெருங்கிகொண்டிருந்த அந்த வேளையில் வெயில் மிக அதிகமாகவே இருந்தது. காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாத வயிறு அடிக்கடி சப்தமிட்டுக்கொண்டிருந்தது. இருந்தும் சாப்பிட மனமில்லை. கடையில் குடிநீர் மட்டும் ஒரு பாட்டில் வாங்கிகொண்டு எனது கிராமத்திற்குச் செல்ல ஆட்டோ ஏறி அமர்ந்தேன்.

ஒரு இருபது நிமிட பயணம். ஆட்டோ இரு குக்கிராமங்களைத்தாண்டி மண்சாலையில் பயணித்தது. சாலையின் இருபுறத்து வயல்களையும் காரிசாத்தான் மலையையும் எனக்கு ரசிக்க மனமில்லை.

தெரு முனையில் ஆட்டோ நின்றது. சீட்டிலிருந்தபடியே தயக்கத்துடன் திரும்பினார் ஆட்டோக்காரர்.

'ஏதோ துக்கம் போல இருக்குங்க. இதுக்கு மேல போக முடியாது. நீங்க தயவுசெய்து நடந்து போயிடுங்க ஸார்',

'சரி, எவ்வளவுங்க?'

'அறுபது'

துக்க வீட்டுக்கு வந்த நான் பேரம் பேச மாடேன் என தெரிந்து வைத்திருந்தான் போலும் ஆட்டோக்காரன்.

நானும் பர்ஸ் பிரித்து பணம் கொடுத்து விட்டு இறங்கி நடந்தேன்.

அந்த துக்க வீட்டைத்தவிர தெரு முழுவதும் அமைதியாக இருந்தது. இழவு வீட்டில் மட்டும் அழுகைச்சத்தமும் பரபரப்பும் அதிகமாக இருந்தது. அந்த வீட்டின் மரணத்தின் அழுகையை அந்த தெருவின் அமைதி சப்தமிடாமல் ரசிப்பதுபோல் இருந்தது.

வீட்டுக்குள் நுழைந்து தோள்பையை வைத்துவிட்டு லுங்கி கட்டிக்கொண்டேன். பின் வாசலில் சென்று கால்முகம் அலம்பிவிட்டு வந்தேன்.

பக்கத்துவீட்டின் அழுகைச்சத்தம் நன்றாககேட்டது. யாரோ ஒரு கிழவியின் அழுகை கொஞ்சம் தூக்கலாக இருந்தது. அதில் ஊமச்சியில் அழுகையை கேட்க நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.

அவரின் மகன் வெளியே சப்பரம் செய்யும் வேலையில் சிலரை வேலைவாங்கிக்கொண்டிருந்தார் . துக்க வீட்டின் உள்ளே சென்று வர முடிவு செய்தேன். தெருவின் மற்ற பெண்களுடன் திண்ணையோரம் நின்றிருந்த அம்மா என்னை பார்த்து மெதுவாகவும் முகத்தில் உணர்ச்சி ஏதும் காட்டிக்கொள்ளாமலும் 'சாப்பிட்டியா?' என்று கேட்டாள்.

அம்மாவிடம் இல்லையென்று தலையாட்டிவிட்டு, மேலும் பேச காத்திராமல் அடுத்த வீட்டில் படியேறினேன். கூடத்தில் வடக்கு பார்த்து சாத்தி வைக்கப்பட்டிருந்தார் பெரியவர். உச்சந்தலை நாடியோடு சேர்த்து வெள்ளைத்துணியால் கட்டப்பட்டிருந்தது. நெற்றியில் நிறைய திருநீரும், சந்தனத்துடன் ஒட்டிவைக்கப்பட்ட ஒரு நாணயமும் இருந்தது. அவரது பிள்ளைகளும் சொந்தக்காரர்களும் கூடத்தில் அழுதுகொண்டும் கொஞ்சம் நடித்துக்கொண்டும் இருந்தார்கள். வீடு முழுவதும் ஊதுவத்தி புகையும் பன்னீர் வாசமும் என் அடிவயிற்றில் ஏதோ செய்தது.

பெரியவரின் பக்கத்தில் ஊமச்சியை காணாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடத்தில் எங்கு தேடியும் ஊமச்சியை காணமுடியவில்லை.

கூடத்தின் பின் அறையிலும் பின் வாசல் திண்ணையின் கூட்டத்திலும்கூட அவள் இல்லை. மீண்டும் வீட்டுக்குள் திரும்பி அடுக்களையில் எட்டிப்பார்த்தபொழுதுதான் அங்கு உட்கார்ந்திருந்தாள்.

அள்ளிமுடிக்காமல் விரிந்து கிடந்தது அவள் தலை. அழுது வீங்கியிருந்தன கண்கள். அழுத கண்ணீரில் அவளின் எதிர்காலத்தின் கேள்விக்குறிதான் தெரிந்தது. இதுவரை எந்த துக்க வீட்டிலும் அழாத என் கண்களும் ஊமச்சிக்காக கலங்கின. துக்கம் தொண்டையில் அடைப்பதை அப்பொழுதான் முதலாவதாக உணர்ந்தேன். அவளிடம் பேசுவதற்கு எதுவுமில்லாத நான் அமைதியாய் சென்று பின்வாசல் திண்ணையில் அமர்ந்தேன். அங்கிருந்து பார்க்க சன்னல் வழியே ஊமச்சி தெரிந்தாள்.

எப்பொழுதும் ஆரவாரமாகவும் இரைச்சலிட்டு பேசிக்கொண்டிருக்கும் ஊமச்சி, எப்பொழுதும் சிரித்தபடியே இருக்கும் ஊமச்சி, எனக்கு விபரம் தெரிந்த இத்தனை வருடங்களில் இன்றுதான் முதன்முதலாக ஊமையாக இருந்தாள்.

-------------------------oooo000$000oooo---------------------------