Welcome!!


பலி

Monday, June 15, 2009

இச்சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்கென எழுதப்பட்டது.
சுட்டி : http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html



" சட்டுனு ஒத்தக் காலப்புடிச்சு வெட்டுனு வெளிய இளுத்தாருவானா, அதவிட்டுட்டு.. "
வாசலுக்குக் கீழே கிடந்த கருங்கல்லில் குடைக்கம்பை ஊன்றி நின்ற முத்தம்மா ஆச்சி கடைவாயில் குதப்பிய பட்டணம் பொடியுடன் அதிகாரம் செய்துகொண்டிருந்தாள். சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டு சென்றால் மட்டுமே உள்ளே செல்லும்படியாக இருந்த கோழிக்கூட்டில் உள்ளே பாதியும் வெளியே பாதியுமாகக் கிடந்தான் செல்வம். கூட்டின் கிழக்குப்பக்கம் இருந்த சிறிய ஜன்னல் வழியாக கசிந்த வெளிச்சம் கோழிகளை அவனுக்கு அடையாளம் காட்டியது.

ஆச்சி பிடிக்கச் சொல்லியிருந்த சிகப்புநிற பெருவெடச்சேவல் மேற்குச் சுவரோரம் இரண்டு கோழிகளுக்குப் பின்னால் நின்றது. பயந்த கோழிகள் இறக்கைகளை அடித்துக்கொண்டதில் கூட்டினுள் புழுதி கிளம்பியது. மேலுதட்டை உயர்த்தி மூக்கை மூடிக்கொண்டு கண்களை மெல்லத் திறந்துபார்த்து சேவலின் காலை எட்டிப்பிடித்தான். காய்ந்த கோழி எச்சம் செல்வத்தின் சட்டையில்லாத வயிற்றில் அழுந்தியது. வெளியே வருவதற்கு முன் சரியான சேவலை பிடித்திருக்கிறோமா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டான். இல்லையென்றால் எழுந்திருக்கும் முன்னமே ஒரு கோழிய புடிக்கத் தெரியாதா என்று குடைக்கம்பால் ஒரு அடிவிழும்.

சேவல் இறக்கைகளை அடிக்காதபடி ஆச்சி அவற்றை குறுக்காகப் பின்னினாள். கையில் தயாராக வைத்திருந்த பாக்கா கயிற்றால் கால்களை சேர்த்துக்கட்டி திண்ணைமேல் பதித்திருந்த ஆட்டுரலில் போட்டுவிட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டாள். பயந்திருந்த சேவல் சப்தமிட்டு கொக்கரித்துக்கொண்டே இருந்தது. பாதிக்கு மண் நிரம்பிய வெண்கல கூஜாவில் பொடி கலந்த எச்சிலை 'புளிச்' என்று துப்பிவிட்டு, மீண்டும் ஒருமுறை பொடி எடுத்து கடைவாயில் இழுத்துக்கொண்டாள். கடைசியாக சுருக்குப்பையிலிருந்து எடுத்த பத்துப்பைசாவை அதுவரை அமைதியாக பார்த்துகொண்டே நின்ற செல்வத்திடம் கொடுத்தாள்.

காலையில் பண்டாரங்கடையிலிருந்து அவித்த மொச்சை வாங்கிவந்து கொடுத்தாலோ, கோழிக்கூட்டில் நுழைந்து கோழி பிடித்துக்கொடுத்தாலோ அவள் தரும் பத்துப்பைசாவுக்காக அல்லாது அவனுக்கு ஆச்சியை கொஞ்சமும் பிடிப்பதில்லை. அவள் அம்மாவை திட்டும்போதும் அதிகாரம் செய்யும்போதும் அவனுக்கு கோபம் கோபமாக வரும். அதேசமயம் அவள் சொல்லும் வேலைகளையும் முடியாது என்றும் சொல்வதற்கில்லை. பிடிக்காது என்றாலும் திண்பண்டம் வாங்கக் கிடைக்கும் பைசாவிற்காக எப்படியாவது செய்து விடுவான்.

பயத்தில் கொக்கரித்துக்கொண்டே இருந்த சேவல் உரலிலிருந்து துள்ளி தரையில் விழுந்தது. திண்ணையில் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே ஆச்சி தன் குடைக்கம்பின் வளைந்த முனையை சேவலின் கட்டப்பட்ட கால்களுக்கிடையே கோதி இழுத்தாள். அது தரையில் தரதரவென்று இழுத்துக்கொண்டும் தலையை உரசிக்கொண்டும் வந்தது. அதன் காலைப்பிடித்து தூக்கி இறக்கைகளை மீண்டும் ஒரு திருகு திருகி உரலுக்குள் தூக்கிப்போட்டாள். அது அதிகமாய் கொக்கரித்துக்கொண்டே சொத்தென விழுந்தது. அதன்பின் அதனால் சிறிதும் அசைய முடியவில்லை.

கிடைத்த காசுக்கு தேன்முட்டாய் வாங்கித் தின்றுகொண்டிருந்த செல்வத்துக்கு கோபமாக வந்தது. கையில் மீதமிருந்த ஒரு தேன்முட்டாயை மண்ணில் போட்டு அதை ஓங்கி மிதித்துவிட்டு வீட்டுக்குள் ஓடினான்.

" யம்மா, கோழிக்கார்ரு எப்பம்மா வருவாரு, ஆச்சி கோழிய பாடாப்படுத்துதா "

" அது கொழிக்கார்ருக்கு இல்லடா.. " என்றாள் அம்மா.

" வேற யார்க்கும்மா ? "

" ஆசாரி வீட்ல வெலய்க்கு கேட்ருக்காகன்னு நெனய்க்கேன்.. நாள மரத்தோணில இருந்து சாமியாடி வாராகளாம் "

அவர்கள் வீட்டிலிருந்து கிழக்கே மூன்றாவது ஆசாரி வீடு. பக்கத்து ஊரான மரத்தோணியில் இருக்கும் முத்துவீரப்பன் சாமிதான் அவர்களின் குல தெய்வம். ஒவ்வொரு வருடமும் அந்தக் கோவில் திருவிழாவின்போது சாமியாடுபவர்கள் ஊர்வலமாக ஆசாரி வீட்டிற்கு வருவார்கள். ஆசாரி வீட்டில் சாமிக்கு பலியும் பூஜையும் செய்வார்கள். பார்க்கவே பயமாக இருக்கும் சாமியாடியை சிறுவயது முதலே அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு பலமுறை வேடிக்கை பார்த்திருக்கிறான் செல்வம்.

இரவு செல்வத்திற்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். மாலையில் ஆசாரியின் மனைவி வீட்டில் வந்து பணம் கொடுத்துவிட்டு சேவலை வாங்கிச் சென்றபோதுகூட அவனுக்கு என்னமோ போல் இருந்தது.

இதற்கு முன்னாலும் பலமுறை ஆச்சிக்கு கோழி பிடித்துக் கொடுத்திருக்கிறான். ஆச்சியும் அவற்றை எல்லாம் வட்டமான மூங்கில் கூடையொன்றை சைக்கிளில் பின்னால் கட்டிக்கொண்டு வரும் கோழிக்காரருக்கு விற்றுவிடுவாள். அதன்பின் அது கொல்லப்படுவதைப் பற்றி அவன் ஒருமுறைகூட நினைத்தது கிடையாது. ஆனால் காலையில் இந்தச் சேவலை கொல்லப்போகிறார்கள் என்று நினைக்கும்போது அவனுக்கு பாவமாக இருந்தது. அதிலும் சாமியாடிக்கு பலி கொடுப்பதற்காக என்று நினைத்தால் கூடவே பயமாகவும் இருந்தது.

அறையை நிறைத்துப் பரவியிருந்த இருட்டின் எல்லா இடத்திலும் சேவலின் உருவமே அவனுக்குத் தெரிந்தது. இரவின் அமைதியின் பின் சேவலின் கொக்கரிப்பு கேட்டுக்கொண்டே இருப்பதுபோலத் தோன்றியது. இரவெல்லாம் சிறிதுநேரம் உறங்குவதாகவும் பிறகு சட்டென விழித்துக்கொள்வதாகவுமே இருந்தான். காலை விடியும்போது அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு சேவலின் கொக்கரிப்புச் சத்தம் மாறி மேளச்சத்தம் தூரத்தில் கேட்டது.

சாமியாடி ஊர்வலம் அடுத்த தெருவில் வந்துகொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் தெருமுனையில் திரும்பி இந்தத் தெருவிற்கு வந்துவிடும். இங்கே ஆசாரி வீட்டில் மட்டும் நின்று பலியும் பூஜையும் வாங்கிகொண்டு திருநீறு பூசிவிட்டு அப்படியே மரத்தோணிக்குப் போய்விடும்.

ஊர்வலம் தெருவில் நுழைந்தவுடனே ஆசாரி வீட்டு முற்றத்தில் கூட்டம் கூட ஆரம்பித்தது. முகம் மட்டும் கழுவியிருந்த செல்வத்தையும் அழைத்துக்கொண்டு அவன் அம்மா ஆசாரி வீட்டு வாசற்படியருகில் போய் நின்றுகொண்டாள். ஆச்சி முன்னமே சென்று அங்கே நின்றிருந்ததால் அவளருகில் நிற்கப் பிடிக்காத செல்வம் விலகி எதிர்ப்பக்க வரிசையில் போய் நின்றான்.

கையில் மூன்றடி நீள அரிவாளுடன் உக்கிரமாக ஆடிவரும் சாமியாடியை பார்க்கவே பயமாக இருந்தது. ஆறடிக்கு மேலான உயரத்தில் ரோமம் அடர்ந்த தொப்பையுடன் இருந்தார். முறுக்கி விட்டிருந்த கடாமீசை. கன்னத்திலும் நெற்றியிலும் நிறைய சந்தனம் பூசப்பட்டிருந்தது. கழுத்தில் சிறியதும் பெரியதுமான நான்கைந்து மாலைகள். கருவிழிகளை உருட்டி உருட்டி மிரட்டும்படியாகவும் நாக்கை மடக்கி அதட்டிக்கொண்டும் எல்லாத் திசைகளிலும் திரும்பி ஆடிக்கொண்டு வந்தார்.

ஊர்வலம் ஆசாரி வீட்டு முற்றத்திற்கு வந்தவுடன் மேளத்தின் வேகம் அதிகமானது. சாமியாடி இன்னும் உக்கிரமாக ஆடினார். ஆசாரி வீட்டில் அனைவரும் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள் முகத்தில் பக்தியும் பெருமையும் அதிகமாக இருந்தது. ஆசாரியின் மனைவி கையிலிருந்த பெரிய தாம்பாளத்தை சாமியாடிக்கு முன்னால் வைத்து விழுந்து வணங்கினார். அதில் மாலை தேங்காய் பழம் எல்லாம் இருந்தன.

முந்தைய நாள் செல்வம் பிடித்துக்கொடுத்த சேவலை ஆசாரியின் மகன் இருகைகளிலும் சேர்த்துப் பிடித்திருந்தான். மேளச் சத்ததிலும் கூட்டத்திலும் அரண்டு போயிருந்த சேவல் சத்தம் போடாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தது. அதன் தடித்து முற்றிய கால்களில் மஞ்சள் குங்குமம் தடவி கழுத்தில் மல்லிகையும் கனகாம்பரமும் சேர்த்துக் கட்டிய பூச்சரத்தைச் சுற்றியிருந்தார்கள். ஆசாரி பயபக்தியுடன் அந்தச் சேவலை வாங்கி சாமியாடியின் கையில் கொடுத்துவிட்டு விழுந்து வணங்கி தேங்காய் உடைத்து பூஜை செய்தார்.

சாமியாடி சேவலைப் பிடித்த கணத்தில் மேளங்களின் சத்தம் இன்னும் அதிகமானது. சுற்றியுள்ளவர்கள் பரபரப்பானார்கள். பெண்கள் குலவை போட்டார்கள். சேவல் பயத்தில் இறக்கைகளை அடித்துக்கொண்டு கத்தியது. அத்தனை மேளச் சத்தத்திற்கு நடுவிலும் அதன் பயம் கலந்த கொக்கரிப்புச் சப்தத்தையே கவனித்துக் கொண்டிருந்தான் செல்வம். அது அவனுக்கு சொல்லமுடியாத அளவுக்கு பாவமாக இருந்தது.

சாமியாடி இடதுகையால் இறக்கைகளை ஆக்ரோஷமாகத் திருகி வலதுகை விரல்களுக்கிடையில் தலையைக் கிடுக்கி கழுத்தின் பின்புறம் வாய்வைத்துக் கடித்து வெடுக்கென இழுத்தார். தனியாகப் பிய்ந்த தலை மண்ணில் விழுந்து துடித்தது.

திமிறிய சேவலின் உடலை வலது கையால் பிடித்தடக்கி அண்ணாந்துகொண்டு அதன் கழுத்தில் வாய்வைத்து இரத்தத்தை ஒரே உறிஞ்சாக உறிஞ்சியதில் சாமியாடியின் கழுத்து நரம்பு புடைத்தது. இரத்தத்தை அவர் விழுங்கும்போது தொண்டையெலும்பு மேலும் கீழும் ஏறியிறங்கியது. கடைவாயில் ஒழுகிய ரத்தத்தை ஒரு மாலையால் துடைத்துக் கொண்டார். துடிப்பு அடங்கிய சேவலை கீழே வீசியெறிந்து, வாயில் ஒட்டியிருந்த கோழி இறகுகளைத் துப்பினார். அதன்பின் ஆசாரி சூடன் பற்றவைத்து காட்டினார்.

எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சாமியாடியிடம் திருநீறு பூசிக்கொண்டார்கள். தனது இரத்தம் பிசிபிசுத்த கையால் எல்லோருக்கும் திருநீறு பூசினார். மேளத்தின் உக்கிரம் கொஞ்சம் குறைந்தது. கூட்டத்தில் நின்றிருந்த பெண்களில் ஒருத்தி வெகுநேரமாய் குவலையிட்டுக்கொண்டே இருந்தாள். அது செல்வத்திற்கு இன்னும் பயத்தைக் கொடுத்தது.

ஆச்சி கையிலும் திருநீறு வாங்கி முந்தானையில் முடிந்துகொண்டாள். அம்மா சொல்லியும்கூட அவன் திருநீறு பூசிக்கொள்ளவில்லை. கீழே அசையாமல் கிடந்த சேவலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அது இறுதியாக ஒருமுறை துள்ளிவிழுந்து அடங்கியது.

செல்வத்திற்கு சப்தமாக அழவேண்டும் போல் இருந்தது. சாமியாடி மீதும் முத்தம்மா ஆச்சி மீதும் அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. திருநீறு வாங்க முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விலகி கலங்கிய கண்களுடன் வீட்டிற்கு நடந்தான்.

இரண்டு நாட்களாக காற்றில் கலந்த சேவலின் கொக்கரிப்புகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அத்தனை மேளச் சத்தத்தையும் மீறி அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.